Tamilசெய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடத்தப்படுகிறது. அவை ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, யுகாதி பண்டிகை, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் நடக்கும் முந்திய வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கும்.

22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், நாளை (செவ்வாய்க்கிழமை) திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. 22-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் முடிந்ததும், மூலவர் சன்னதி சுத்தி, காலை 6 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, விஷ்வக்சேனருக்கு விசேஷ சமர்ப்பணம், காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிக்குள் விமான பிரகார வலம், மூலவருக்கும் மற்றும் உற்சவருக்கும் புதிய பட்டு வஸ்திரம் அணிவித்தல், பஞ்சாங்க சிரவணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் பிரதான அர்ச்சகர்கள் அமர்ந்து சாஸ்திர பூர்வமாக உகாதி ஆஸ்தானத்தை நடத்துகின்றனர். யுகாதி ஆஸ்தானத்தையொட்டி கோவிலில் 22-ந்தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) என 2 நாட்களும் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களும் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படுகின்றன. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.