Tamilசெய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட்கள் தீர்ந்துவிட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்தது. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு சென்னையில் இருந்து ஒரு நாளைக்கு 100 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு சென்று வந்தனர். ஆனால் தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர்.

இதேபோல் அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். எனவே இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் நேற்று 76,425 பேர் தரிசனம் செய்தனர்.36,053 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.