X

திருப்பதியில் விஐபி தரிசனத்தில் முறைகேடு!

திருப்பதியில் தற்போது தரிசனம் மற்றும் லட்டு முறைகேட்டைத் தடுக்க தேவஸ்தானம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்ததுடன் இடைத்தரகர்களை கட்டுப்படுத்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் அளித்து வருகிறது.

மேலும், லட்டு முறைகேட்டைத் தடுக்க ஏழுமலையானை தரிசித்து திரும்பும் அனைவருக்கும் இலவச லட்டு வழங்கி, கூடுதல் லட்டு தேவைப்படுவோருக்கு கட்டுப்பாடு இல்லாமல் லட்டு வழங்கும் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது.

இதனால் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு டிக்கெட் முறைகேட்டில் ஈடுபடும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மேலும், வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் அனைவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று வி.ஐ.பி. பிரேக் டிக்கெட் பெற்ற 6 பேர் ஏழுமலையானை தரிசிக்க சென்றனர்.

அவர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்களுக்கு தேவஸ்தான ஊழியர் தாமோதர் ரெட்டி டிக்கெட் அளித்தது தெரியவந்தது. தலா ரூ.500 மதிப்புள்ள டிக்கெட்டை அவர் ரூ.6 ஆயிரம் என ரூ.24 ஆயிரத்துக்கு 4 டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர்.