திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனம் தொடங்கியது
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளால் ஜூன் 10-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆன்லைன் மூலமாகவும், இலவச டோக்கன் பெற்றும் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தான பணியாளர்களுக்கு கொரோனா பரவியதால் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக்கூட்டத்தில் திருப்பதியில் நிறுத்தப்பட்ட இலவச தரிசனத்தை மீண்டும் இன்று முதல் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 2 மாத காலமாக திருப்பதியில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசன நேரடி டோக்கன்கள் விநியோகம் இன்று தொடங்கியது.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள கவுன்ட்டர்களில் 3 ஆயிரம் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது.
முதல்நாள் என்பதால் டோக்கன் வாங்க பக்தர்கள் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. டோக்கனில் தரிசன நாள் விவரம் குறிப்பிடப்பட்டிருக்கும் அதன் அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நேரடி தரிசன டோக்கன்களை விரைவில் ஆன்லைன் மூலம் வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக நேற்று நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது திருமலையில் நடக்கும் உற்சவங்கள் ஏழுமலையானுக்கு தனிமையில் மட்டும் நடத்தப்படுகின்றன.
திருப்பதியில் இந்த ஆண்டில் 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகிறது.
செப்டம்பர் மாதம் வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் மாதம் நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெறும். முதல் பிரம்மோற்சவம் வருகிற 9-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.
ஊரடங்கு விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் ஓரிடத்தல் கூடி விழா கொண்டாடுவதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே செப்டம்பரில் நடக்க உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஏழுமலையான் கோவிலுக்குள் தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதுவரை தேவஸ்தான வரலாற்றில் நடைபெறாத நிகழ்வாக இது கருதப்படுகிறது. அக்டோபரில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் அப்போது மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தும் தளர்வுகள் அடிப்படையில் நடத்தப்படும்.
ஊரடங்கு விதிமுறைகளால் ஏழுமலையான் சேவா டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
சேவா டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அதற்கு பதில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
தங்கம் மற்றும் பணம் முதலீடுகள் மூலம் தேவஸ்தானத்திற்கு மாதாமாதம் வட்டி தொகை அதிகம் கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.