திருப்பதியில் பக்தர்களை காக்க வைக்காமல் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு

திருமலை- திருப்பதி தேவஸ்தானம் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டமும் குறைந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து சாமி தரிசனத்துக்காக வந்து திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே தரிசனத்துக்காக வரும் பக்தர்களுக்கு ஆந்திர மாநில அரசின் உத்தரவுபடி தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் உள்ள கம்பார்ட்மெண்டுகளை விரைவில் மூட ஆலோசனை நடத்தி வருகிறோம். அங்கு பக்தர்கள் காத்திருப்பதை தவிர்த்து 17-ந்தேதியில் இருந்து பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

சாமி தரிசனம் செய்ய வரும் டைம் ஸ்லாட் பக்தர்கள் தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

டைம் ஸ்லாட் பக்தர்கள் திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் பீதியால் ஏழுமலையான் கோவிலில் நடக்கும் ஆர்ஜித சேவைகளான விசே‌ஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது.

அதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய இருந்த பக்தர்களுக்கு மாற்று ஏற்பாடாக வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.

அந்த பக்தர்கள் திருமலையில் உள்ள கூடுதல் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு, வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், அன்னதான கூடம், தங்கும் விடுதிகளில் அதிக பக்தர்கள் கூடுவதால் சுகாதாரத்துறை சார்பில் 24 மணி நேரமும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 19-ந்தேதி வரை 3 நாட்களுக்கு திருமலை அருகே பார்வேடு மண்டபத்தில் சீனிவாச சந்தியோற்சவா சகிதா தன்வந்திரி மகா யாகம் செய்யப்பட உள்ளது.

அதில் விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதி, மந்ராலயம் சொரூபானந்தேந்திரா சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news