Tamilசெய்திகள்

திருப்பதியில் இன்று முதல் பக்தர்களுக்கு நேரடி தரிசனம்!

கொரோனா வைரஸ் பரவி வருவதால், திருமலையில் பக்தர்கள், ஒரே இடத்தில் கூடுவதை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை, தேவஸ்தானம் எடுத்து வருகிறது.

திருப்பதியில் உள்ள, அலிபிரி சோதனை சாவடி மற்றும் நடைபாதை மார்க்கங்களில், சுகாதார பணியாளர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.

காத்திருப்பு அறையில், பக்தர்கள் பல மணிநேரம் கூடுவதால், ஒருவருக்கு ஏற்படும் தொற்று, மற்றவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால், இன்று முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் கியூ காம்ப்ளக்சில் காத்திருக்க வைக்கப்படாமல் நேரடி தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு, ரூ.300 விரைவு தரிசனம், திவ்யதரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீடு தரிசனத்தில் மட்டுமே, பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நடைமுறை நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்தது. திருப்பதியில் இதற்காக 8 இடங்களில் டைம் ஸ்லாட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.

பக்தர்கள், தங்களின் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை, தங்களுடன் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தான், பக்தர்கள் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.

மேலும், ஆர்ஜித சேவைகளான, விசே‌ஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை மார்ச் 31-ந் தேதி வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதால், இந்த டிக்கெட்டிற்கு முன்பதிவு செய்த பக்தர்கள், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதற்கு பதிலாக, வி.ஐ.பி., பிரேக் தரிசன அனுமதியை பெற்றுக் கொள்ளலாம்.

திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 55,827 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

17 ஆயிரம் பேர் முடிக்காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 6 லட்சம் வசூலாகியுள்ளது.

சாதாரண நாட்களில் இந்த நேரத்தில் 80 ஆயிரத்திலிருந்து 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வார்கள். அதனுடன் ஒப்பிடுகையில், சுமார் 35 ஆயிரம் பக்தர்கள் வரை குறைந்துள்ளனர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது அந்த பஸ்களில் பக்தர்கள் கூட்டமின்றி காலியாக செல்கிறது.

பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் மாடவீதிகள், கோவில் வளாகம் முன்புறம், அன்னதான கூடம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதேபோல் தங்கும் விடுதிகளும் பக்தர்கள் இன்றி காலியாக கிடக்கிறது.

நேரடி டிக்கெட் பெறும் டைம் ஸ்லாட் கவுண்டர்களும் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *