திருப்பதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தது எப்படி? – வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் திருமலையில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏழுமலையான் கோவில் உச்சியில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கவும் தடை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் சாமி கோவிலில் தொடங்கி ஏழுமலையான் கோவில் உச்சிவரை வாலிபர் ஒருவர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் திருமலை ஒன் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கிரண் என்ற வாலிபர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பாதுகாப்பு விதிகளை மீறி கோவிலின் காட்சிகளை சமூக விரோத சக்திகளுக்கு பயன் தரும் வகையில் செயல்பட்டதாக ஐ.பி.சி செக்ஷன் 447 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். கோவிலில் ஆகம விதிகளுக்கு எதிராக வீடியோ எடுத்து பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலத்த பாதுகாப்பையும் மீறி ஆளில்லா குட்டி விமானம் மூலம் வாலிபர் எப்படி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என பக்தர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். திருப்பதியில் நேற்று 78,158 பேர் தரிசனம் செய்தனர். 27,090 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.