திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

கொரோனா பேரிடர் காலத்திலும் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே அளித்து வந்த தமிழக விமான நிலையங்கள் தளர்வுகள் அடிப்படையில் வெளிநாட்டு விமான சேவையினை படிப்படியாக தொடங்கி வருகிறது.

திருச்சி விமான நிலையத்திற்கும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானமானது தமிழகத்திலிருந்து காலியாக சென்று வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகளிடம் வெளிநாடுகளில் உள்ள தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் தங்கத்தை கொடுத்து அனுப்புவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சார்ஜாவில் இருந்து நேற்று காலை திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அவர்கள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான 6 பயணிகளை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்களிடமிருந்து 6,231 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் இந்திய மதிப்பு ரூ.3 கோடி ஆகும். மேலும் அதனை கடத்தி வந்த 6 நபர்களிடம் மத்திய வருவாய் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்பட்டு வருகிறது. ஆனால் திருச்சி விமான நிலையத்தில் மட்டும் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும் தங்கம் குறித்த தகவல்கள் வெளியிடப்படுவதில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவது தொடர் கதையாக இருந்தது. ஊரடங்கு காலத்தில் சற்றே தங்கம் கடத்தல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து இருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools