Tamilசெய்திகள்

திருச்சி மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்தும் – திமுக-வினர் நம்பிக்கை

மலைக்கோட்டை நகரான திருச்சிக்கும், தி.மு.க.வுக்குமான உறவு நீண்ட வரலாறு கொண்டது. தி.மு.க.வின் முதல் மாநாடு 1951-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. அதனைத்தொடர்ந்து 1956-ம் ஆண்டு மே 17-ந்தேதி முதல் 20-ந்தேதி தேதி வரை திருச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தான், தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன்முறையாக தி.மு.க. போட்டியிட்டது. அந்த தேர்தலில் 15 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க. போட்டியிட்டு, 50 இடங்களை கைப்பற்றியது. 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் 179 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியிருந்தது.

அதன்பிறகு 1990, 1996, 2006, 2014-ம் ஆண்டுகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடந்துள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை திருச்சியில் மாநாடு நடந்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இதை கருணாநிதியும், மு.க.ஸ்டாலினுமே தங்கள் பேச்சுகளில் அவ்வப்போது வெளிப்படுத்தி உள்ளனர்.

அந்தவகையில் இந்தமுறை திருச்சியில் மாநாடு போல நடைபெற்ற பொதுக்கூட்டமும் நிச்சயம் ஒரு திருப்புமுனையை தரும் என்பது தி.மு.க.வினரின் நம்பிக்கையாகவே இருக்கிறது.