திருச்சி மத்திய சிறையில் வெளிநாட்டு கைதிகள் தற்கொலை முயற்சி!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்காளதேசத்தினர், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மொத்தம் 70 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள், போலி பாஸ்போர்ட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், கஞ்சா, போதை பொருட்கள் கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தண்டனை காலம் முடிந்ததும் விடுவிக்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்கு அதிகாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தண்டனை காலம் முடிந்த வெளிநாட்டு வாலிபர் திருச்சி முகாம் சிறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் நைஜீரியா கைதி தண்டனை முடிந்து அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் முகாமில் உள்ள 46 கைதிகள் தங்களுக்கு தண்டனை காலம் முடிந்ததால் தங்களையும் விடுவிக்க கோரி அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். ஆனால் சில பிரச்சினைகளால் அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் இலங்கை தமிழர்கள், வங்காளதேசம், சீனா, பல்கேரியா நாட்டை சேர்ந்த 46 பேர் தங்களை உடனடியாக தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
சட்ட விரோதமாக தங்களை கைது செய்து முகாமில் அடைத்து வைத்து இருப்பதாகவும், வழக்கில் ஜாமீன் கிடைத்தும் வெளியே விட மறுப்பதாகவும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட மறுத்தனர்.
அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசினர். ஆனாலும் கைதிகள் போராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது.
இந்த நிலையில் இன்று காலை முகாம் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 46 கைதிகளில் 20 கைதிகள் விஷம் குடித்ததாக கூறப்பட்டது. அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முகாமில் கைதிகளுக்கு விஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான விஷம் சாப்பிட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.