திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந்தேதி சுவரில் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளையில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன், சுரேஷ் ஆகியோர் பெங்களூர், செங்கம் கோர்ட்டில் சரணடைந்தனர். மணிகண்டன் என்பவரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 25 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் முருகனிடம் பெங்களூர் போலீசாரும், சுரேஷ், மணிகண்டனை திருச்சி தனிப்படை போலீசாரும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சியில் மேலும் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. அது பற்றிய விபரம் வருமாறு:-
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த பெல் தொழிற்சாலை வளாகத்திலேயே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதி திருவெறும்பூர் போலீசாரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்தாலும் பெல் தொழிற்சாலைக்கென தனியாக போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள்.
யாரும் உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவும் திகழ்கிறது. ஊழியர்கள் உள்ளே சென்றாலும், வெளியே சென்றாலும் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் உடமைகளும் கடுமையாக சோதனை செய்யப்படும்.
அப்பேற்பட்ட பாதுகாப்பு நிறைந்த பெல் வளாகத்தில் நிர்வாக பணிகளை கவனிக்கும் அலுவலகம் அருகே பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் பெல் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். மேலும் நகைகளை அடமானம் வைத்து கடனும் பெற்று வந்தனர்.
நேற்று மாலை பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் திறந்து கிடந்தன.
இது குறித்து வங்கி ஊழியர்கள் உடனடியாக திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக்கிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே எஸ்.பி. தலைமையிலான போலீசார் வங்கிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
மோப்ப நாய் வங்கியில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சென்று சிறிது தூரத்தில் நின்றுவிட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வங்கியில் இருந்த ரூ.1½ பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.
பெல் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பெல் கூட்டுறவு வங்கியில் எப்போதும் காவலர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் மாலை பணி முடிந்ததும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு செல்வார்கள். ஆனால் நேற்று பணத்தை லாக்கரில் வைக்காமல் மேஜை டிராயரில் வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் மேஜை டிராயரில் இருந்த அந்த பணத்தை லாவகமாக திருடிச் சென்றுள்ளனர். பெல் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரே இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து அவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள்.