திருச்சியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இக்கோவில் வளாகத்தில் உள்ள கொட்டாரம் 100 கால் மண்டபம் அருகே உள்ள காலி இடத்தை தூய்மை செய்து அங்கு வாழைக்கன்றுகள் நடவும், பூச்செடிகள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணியில் நேற்று கோவில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். .
அப்போது, கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் குழி தோண்டியபோது, வித்தியாசமாக சத்தம் கேட்டது. இதனையடுத்து அதனை மெதுவாக தோண்டியபோது, செம்பு பெட்டகம் ஒன்று தென்பட்டது. அந்த பெட்டகத்தை எடுத்து பார்த்தபோது, அதில் தங்கக்காசுகள் இருப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
இது குறித்து ஊழியர்கள், கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார்கள் ரவி, சுரேஷ், வருவாய் ஆய்வாளர் திலகவதி, கிராம நிர்வாக அதிகாரி அருண்பிரியா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கலயத்தில் இருந்த தங்கக்காசுகள் எடுத்து எண்ணப்பட்டன.
அந்த பெட்டகத்தில் 505 தங்கக்காசுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அவற்றில் ஒரு தங்க காசு மட்டும் 10 ரூபாய் நாணயம் அளவிலும், மீதமுள்ள தங்கக்காசுகள் சட்டை பட்டன் அளவிலும் இருந்தது. இது 1 கிலோ 716 கிராம் எடைகொண்டதாகும். இதன் மதிப்பு ரூ.61 லட்சம் ஆகும். ஒவ்வொரு தங்க காசும் 3.3 கிராம் எடை உள்ளது. ஒன்று மட்டும் 10 கிராம் எடை உள்ளது என கூறப்படுகிறது.
அதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில், தங்கக்காசுகள் ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. தங்கக்காசுகள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகே அது, எந்த காலக்கட்டத்தை சேர்ந்தது என தெரிய வரும் என்று கோவில் நிர்வாக அதிகாரி மாரியப்பன் தெரிவித்தார்.
திருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னும் புதையல் சிக்க வாய்ப்பிருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, காலியான இடத்தை முழுமையாக தோண்டி ஆய்வு செய்திட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.