திருச்சியில் பிப்ரவரி மாதம் திமுக மாநாடு – இடத்தை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. கடந்த 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தி.மு.க.வின் முதல் மாநாடு 1951-ம் ஆண்டு சென்னையில் நடந்தது. அப்போது தி.மு.க. தேர்தலில் பங்கெடுக்காத இயக்கமாக இருந்தது. 2-வது மாநில மாநாடு, 1956-ம் ஆண்டு மே 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை திருச்சியில் நடந்தது. இந்த மாநாட்டில் தான், வருகிற தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா, வேண்டாமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த அண்ணா ஏற்பாடு செய்தார்.
அதன்படி மாநாட்டில் கலந்துகொண்டோரில் 56 ஆயிரத்து 942 பேர் தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாம் என்றும், 4 ஆயிரத்து 203 பேர் போட்டியிட வேண்டாம் என்றும் வாக்களித்தனர். பெரும்பாலானோர் தெரிவித்த கருத்து அடிப்படையில் தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதன் முறையாக தி.மு.க. போட்டியிட்டது. அந்த தேர்தலில் 15 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.
அதனைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க. போட்டியிட்டு, 50 இடங்களை கைப்பற்றியது. 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அந்த தேர்தலில் 179 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியிருந்தது. அண்ணா மறைவுக்கு பிறகு 1970, 1990, 1996, 2006, 2014-ம் ஆண்டுகளில் திருச்சியில் தி.மு.க. மாநாடு நடந்துள்ளது. தி.மு.க.வை பொறுத்தவரை திருச்சியில் மாநாடு நடந்தால் அது திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
இந்தநிலையில் திருச்சியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்திலோ அல்லது 2-வது வாரத்திலோ மாநாட்டை நடத்துவது என தி.மு.க. திட்டமிட்டுள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சுமார் 300 ஏக்கர் நிலம் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் சமன்படுத்தும் பணியை, தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.
இதற்கிடையில் நாமக்கல்லில் மக்கள் கிராமசபை கூட்டத்தை முடித்துவிட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பகல் 2.25 மணி அளவில் சிறுகனூர் அருகே மாநாடு நடைபெறும் இடத்துக்கு காரில் வந்தார். காரில் இருந்து இறங்கி மாநாடு நடைபெறும் திடலுக்கு சென்றார். அங்கு மாநாட்டின் முகப்பு பகுதி அமையும் இடம், மேடை அமையும் இடம் ஆகியவற்றை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அப்போது மாநாடு அமையவுள்ள இடத்தின் வரைபடத்தையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் மாநாட்டு பணிகள் குறித்து கே.என்.நேரு, அன்பில்மகேஷ் பொய்யாமொழி உள்பட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
மாநாடு எந்த பெயரில் நடத்தப்படும்? என்பதை மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.
தி.மு.க. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய திருச்சியில், தற்போது நடைபெற இருக்கும் மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது என தி.மு.க.வினர் உற்சாகம் பொங்க கருத்து தெரிவிக்கிறார்கள்.