Tamilசெய்திகள்

திருக்குறளைப் பற்றி பேசினால் தமிழர்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி நினைப்பது தவறு – வைகோ பேச்சு

அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் நடந்த ம.தி.மு.க பிரமுகர் இல்ல திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

வாழ்க்கையில் ஓர் ஒழுங்கு வேண்டும். அந்த ஒழுங்கை கற்றுக்கொண்டால் தான் வாழ்க்கையை முறைப்படுத்தி நடத்தமுடியும். 50 வருடங்களுக்கு முன்பு விவகாரத்து செய்து கொண்டார்கள் என்ற செய்தியே கிடையாது. ஆனால் இன்றைக்கு திருமணமான 3 மாதத்திற்குள் வாழ்க்கை கசந்து விடுகிறது. கணவன்-மனைவி இடையே பிரிவினை வந்து நீதிமன்றத்திற்கு போய் விவகாரத்து பெற்று சென்று விடுகிறார்கள்.

இப்போது நான் சொல்வதற்கு காரணம், இப்போது இருக்கிற சமுதாயத்தில் இளைஞர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.கணவன்-மனைவி வாழ்க்கை என்பது ஒர் உயர்தரமான இல்லற வாழ்க்கை. இந்த இல்லற வாழ்க்கையில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக அன்போடு இருந்து நீங்கள் காட்டுகிற அந்த அன்பில் தான் உங்கள் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள்.

தற்போது 18 வயதுடைய சிறுவர்கள்தான்.கொலை செய்கிறார்கள். சமூகம் மிகவும் கெட்டுப் போய் விட்டது. இதே நிலை நீடிக்குமானால் 10 ஆண்டுகாலத்தில் நிலைமை படுமோசமாகி விடும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். திருக்குறளில் உள்ள கருத்துக்கள் எந்த புத்தகத்திலும் கிடையாது.எந்த மதத்திலும் கிடையாது.

திருக்குறளுக்கு நிகரான ஒர்சிந்தணை கருவூலம் உலகில் எந்த மொழியிலும் கிடையாது. ஆனால் சாதுர்யமாக பிரதமர் மோடி திருக்குறளை பற்றி பேசுகிறார். வட நாட்டில் இருந்து வருபவர்கள் திருக்குறளில் 2 திருக்குறளை சொல்லி விட்டால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். அது தவறு.

உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தமிழ் பெயர் வையுங்கள்.ஒழுக்கத்தை கற்பியுங்கள்.தற்போது வாழ்க்கையே துன்பமாகி விட்டது.சிறிய குழந்தைகளிடம் செல்போன் கொடுக்காதீர்கள்.செல்போனால் கெட்டுப் போகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.