X

திரிபுரா சட்டசபை தேர்தல் – நாளை வாக்குப் பதிவு தொடங்குகிறது

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வரும் 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டசபைக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. 60 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக மாணிக் சஹா செயல்பட்டு வருகிறார். தேர்தல் நாள் நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.

ஆளும் பாஜக மற்றும் திரிபுரா உள்ளூர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்கின்றன. முன்னாள் ஆளும் கட்சிகளான சிபிஎம்-மும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன.

இவ்விரு கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்பதால், தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. வேட்பாளர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வந்தனர்.

இந்நிலையில், திரிபுராவில் நாளை சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நேற்று மாலை 4 மணியுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வரும் 17-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.