உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே சிறுமி சென்ற கார் நேற்று விபத்தில் சிக்கியது. ரேபரேலியில் கார் விபத்தில் சிக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக முக்கிய தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உன்னாவ் பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கை சிபிஐக்கு மாற்ற உ.பி. அரசு நேற்று பரிந்துரை செய்துள்ளது.
இந்நிலையில், உன்னாவ் பெண் விவகாரம் மற்றும் உபியில் ராணுவ வீரர் அடித்து கொல்லப்பட்டது தொடர்பாக நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.