X

திரவுபதி முர்முமுக்காக டெல்லி சென்ற சந்தாலி சேலை!

நம் ஊரில் பண்டிகை நாட்களில், விசேஷ நாட்களில் பெண்கள் பட்டுப்புடவை அணிகிறார்கள், அதிலும் காஞ்சிபுரம் பட்டுச்சேலைதான் ஸ்பெஷல். ஆனால் ஒடிசா மாநிலத்தில், இப்படி விசேஷ நாட்களில் பழங்குடி இனப்பெண்கள் அவர்களது கலாசாரத்தின்படி அணிவது சந்தாலி சேலைதான்.

இந்த சந்தாலி சேலையை இன்று ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழாவில் திரவுபதி முர்மு அணிவாரோ, இல்லையோ, அதற்கு நடைமுறைகள் அனுமதிக்கின்றனவோ இல்லையோ அது வேறு கதை. ஆனால் இந்த விழாவுக்காக திரவுபதி முர்முவுக்காக அவரது அண்ணன் மனைவி சுக்ரி துடு, சந்தாலி புடவையோடு டெல்லி சென்றிருக்கிறார். “அவர் பதவி ஏற்பு விழாவில் அணிய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நான் அவருக்காக சந்தாலி புடவை எடுத்துச்செல்கிறேன். ஜனாதிபதி மாளிகைதான் புதிய ஜனாதிபதி என்ன உடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்கிறார்கள்” என குறிப்பிட்டார் சுக்ரி துடு.

நாட்டின் புதிய ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்கிற முர்முவை இனி நாங்கள் என்ன சொல்லி அழைப்பது என்று கவலைப்படுகிறார்கள் அவரது நண்பர்கள், தோழிகள் என்பது தனிக்கதை. முர்முவுடன் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்த ராமச்சந்திர முர்மு, “நாங்கள் எல்லாரும் ஒன்றாகத்தான் விளையாடுவோம். அந்தக் காலத்தில் நான் அவரை ‘தூ’ என்றுதான் சாதாரணமாக அழைப்பேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிப்போய்விட்டது. அவரை நான் இனி இப்படி ‘தூ’ என அழைக்க முடியுமா என தெரியவில்லை. அவர் நாட்டின் முதல் குடிமகள் ஆகி விட்டாரே, இனி மதிப்பாக ‘ஆப்’ என்றுதான் அழைக்க வேண்டுமோ? குழம்பிப் போய் இருக்கிறேன்” என்கிறார். இவர் ஒரு விவசாயி.

மற்றொரு நண்பரான கோவிந்த் மாஜி என்ன சொல்கிறார் என கேளுங்கள். “அவர் ஜார்கண்ட் கவர்னராக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்தார். நாங்கள் எப்போதும்போல பேசிக்கொண்டிருந்தோம். அவர் மிகவும் இயல்பாக பழகக்கூடியவர். அதில் எந்த சம்பிரதாயமும் கிடையாது. ஆனால், நாட்டின் ஜனாதிபதியுடன் நான் இனி அப்படி பேச முடியுமா என்பதுதான் என் கவலை” என்கிறார் இவர்.

“பள்ளியில் படிக்கிறபோது அவர் நன்றாக படித்தார். நான் வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன். ஆனால் அவர் தனது வீட்டுக்கு மதியச்சாப்பாட்டுக்கு என்னை பல முறை அழைத்திருக்கிறார். அவர் வீட்டில் நான் அவருடன் பகல்பாத் (ஒடிசா உணவு) சாப்பிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது” என்று சொல்லி விட்டு அந்த நினைவலைகளில் மூழ்கிப்போகிறார், கோவிந்த் மாஜி.

முர்முவுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த சுசித்ரா சமல் என்ற தோழி என்ன சொல்கிறார்? “நாங்கள் நிறைய பேசி இருக்கிறோம். அரட்டை அடித்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் கலாய்ப்போம். எங்கள் வாழ்க்கை மாற்றங்கள் பற்றி பேசி இருக்கிறோம். அவர் எப்போதும் இதமானவர். அவர் ஜனாதிபதி மாளிகையில் குடியேறிய பின்பு நாங்கள் அங்கு சென்று அவரை சந்திப்போம்”. ஜனாதிபதி மாளிகை வித்தியாசமான விருந்தினர்களை வரவேற்க காத்திருக்கிறது.