தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 வது நினைவு தினம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபா ராணி மற்றும் இம்மானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். காலை 9 மணிக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ராஜ கண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், மணிகண்டன், ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் பல்வேறு சமுதாய நல அமைப்பினர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். போலீசார் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினர், அமைப்புகளுக்கு நேரம் ஒதுக்கி இருந்தனர். அந்த நேரத்தில் மட்டுமே அவர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக இன்று காலை பெண்கள் உள்பட ஏராளமானோர் முளைப்பாரி எடுத்தும், வேல் குத்தியும் நினைவிடத்தில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட் டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் தலைமையில் தென் மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை ஆகியோர் மேற்பார்வையில் 25 எஸ்.பி.க்கள் ,10 கூடுதல் எஸ்.பி.க்கள், 70 டி.எஸ்.பி.க்கள் என 8 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் டிரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மது கடைகள் மூடப்பட்டிருந்தன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news