தமிழக பா.ஜ.க.வில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று நடந்தது. பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
அப்போது பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன், மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையடுத்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. எங்களுக்கு பலவீனமான பகுதி என்று கருதப்பட்ட தஞ்சையில் இருந்து ஏராளமானோர் பா.ஜ.க.வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிணந்தின்னி கழுகுகள் உயரே பறந்தாலும், அதனுடைய பார்வை பிணத்தின் மீதுதான் இருக்கும். அதுபோலத்தான் தி.மு.க.வின் செயல்பாடும் இருக்கிறது.
தி.மு.க. சூழ்ச்சி செய்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த கட்சி. தமிழை சொல்லி பிழைப்பு நடத்தி வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்தை குறிப்பிட்டு, பா.ஜ.க. இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்று பொய்யாக திசை திருப்புகிறார்கள். கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து வந்த பின்னர் 1½ லட்சம் ஈழத்தமிழர்கள் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே அவர்களை பற்றி பேசுவதற்கு தி.மு.க. மற்றும் காங்கிரசுக்கு அருகதை கிடையாது.
மண்ணின் உரிமையோடு இருப்பவர்களை அகற்றும் முடிவை ஒருபோதும் பா.ஜ.க. எடுக்காது. தி.மு.க.வின் வார்த்தைகளை நம்பி மாணவர்கள், சிறுபான்மையினர் போராட்டம் நடத்த வேண்டாம். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழ் சொந்தங்களின் மண்ணில் சிங்களர்கள் குடியேறிவிடக்கூடாது. இலங்கையில் தமிழ் மண் கோலோச்சவேண்டும். இலங்கை தமிழர்களின் மனநிலையை அறியாமல் எந்த கட்சிகளும் அவர்களுடைய முடிவுகளில் தலையிடக்கூடாது.
அரசியல் லாபத்துக்காக ஈழத்தமிழர்களை யாரும் பயன்படுத்தவேண்டாம். ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்துவிட்டு, இப்போது அவர்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவதூறு, பொய் பிரசாரம் செய்யும் தி.மு.க.வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் 20-ந்தேதி (நாளை) தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.