திமுக வில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் – அமைச்சர் ஜெயகுமார்

ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 332 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், காது கேளாதோருக்கு காது கேட்கும் கருவி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க.வின் நிலை பரிதாபமாக உள்ளது. அவர்கள் மெகா கூட்டணி என கூறினர். ஆனால் இன்று அவர்கள் நிலை அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.

குடும்பத்தில் குழப்பம், கட்சியில் சீனியர்களை மதிக்காது, உதயநிதியை முன்னிலைப்படுத்திய நிலைகளால் தி.மு.க.வின் உள்ளடி வேலைகள் செய்தனர்.

விரைவில் தி.மு.க.வில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும். பொதுமக்கள் ஆதரவு எங்களுக்கு தான் உள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த உண்மை தெரிகிறது.

2021-ல் அம்மாவின் ஆட்சியைதான் நாங்கள் அமைப்போம். மீனவர்களுக்கு சேட்டிலைட் போன் வழங்கும் திட்டம் தயாராக உள்ளது. இதில் மத்திய அரசு மாநில அரசு மற்றும் மீனவர்கள் பங்களிப்புடன் சேட்டிலைட் போன் விரைவில் வழங்க தயாராக உள்ளோம்.

மருத்துவர்கள் போராட்டம் தேவையற்றது. உடனே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பணிக்கு திரும்பவேண்டும். கண்டிப்பாக அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும்.

ஒரே நாளில் அனைத்து கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில் இதுபோன்ற போராட்டங்கள் ஏராளமான நடைபெற்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, சமூக நலத்துறை ஆணையாளர் வர்கீஸ் மாவட்டச் செயலாளர் பாலகங்கா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news