திமுக-வின் நல்லாட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி – கனிமொழி எம்.பி
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று உள்ளன. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் மாநில தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கனிமொழி எம்.பி. சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் கலைஞர் அரங்கில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்துக்கு கனிமொழி எம்.பி., சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் திறந்த ஜீப்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்று மாநகரில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், குரூஸ்பர்னாந்து, இந்திராகாந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பிறகு கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று உள்ளது. இது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தந்த மிகச்சிறந்த பாராட்டு பத்திரம். தூத்துக்குடியில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடியது. இந்த வெற்றி தி.மு.க.வின் நல்லாட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி.
எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயன்றனர். ஆனால் மக்களுக்கு தெரியும், யார் நல்லாட்சியை தந்து கொண்டு இருக்கிறார்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து கொண்டு இருக்கிறார்கள் என்று. அதை உணர்ந்து வாக்களித்து உள்ளனர். இந்த வெற்றி, மக்களுக்கு இன்னும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்து உள்ளது.
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை மோசமாக கையாண்டவர்கள் அ.தி.மு.க.வினர் என்பது மக்களுக்கு தெரியும். தூத்துக்குடியில் ஒவ்வொரு தடவையும் மழைநீர் தேங்கும்போது, நாங்கள் மக்களோடு இருந்து உள்ளோம். நிச்சயமாக வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கான நடவடிக்கை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.