திமுக-வின் இளைஞரணி செயலாளராகும் உதயநிதி
ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் உதயநிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நண்பேன்டா, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இவரது பிரசாரம் சாதாரண மக்களை கவரும் வகையில் இருந்தது. உதய நிதியின் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததாக தி.மு.க. மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் கட்சியின் முக்கிய பதவியான இளைஞர் அணி செயலாளர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் வெள்ளக் கோவில் சாமிநாதன் தாமாகவே முன்வந்து இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை மு.க.ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். இதை ஏற்றுக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. என்றாலும் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உதயநிதி இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.