மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்துள்ளது. இந்த குழு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட நான்கு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிவடைந்து ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 3 தொகுதிகள் கேட்கிறது. அதில் உறுதியாக இருக்கிறது. ஆனால் திமுக கடந்த 2019 தேர்தலை போன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்க தயாராக இருக்கிறது. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மூன்று தொகுதிகள் கேட்பதால் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் உள்ளது.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிவு செய்ய விரும்புகிறார். இதன் காரணமாக திமுக நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனடிப்படையில் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் தனது முடிவில் உறுதியாக இருந்தால் பேச்சுவார்த்தையில் இழுபறிதான் நீடிக்க வாய்ப்புள்ளது.
3 தொகுதிகள் பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் திமுக கூட்டணியில்தான் இருப்போம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.