Tamilசெய்திகள்

திமுக முப்பெரும் விழா – 60 ஆயிரம் பேர் அமரும்படி விழா பந்தல் அமைப்பு

விருதுநகர்-சாத்தூர் இடையே பட்டபுதூரில் வருகிற 15-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அங்கு நடைபெறும் விழா ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் அவர்கள் கூறியதாவது:-

விருதுநகர் பட்டம்புதூர் அண்ணாநகரில் அமைந்து உள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிலான கலைஞர் திடலில் வருகிற 15-ந்தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.

விழா நடைபெறும் பிரமாண்ட பந்தலுக்கு பிரதான முகப்பாக பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேரின் உருவப்படங்களுடன் மலை முகடு போன்று அமைக்கப்படுகிறது. விழா பந்தல் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்படுகிறது. பிரமாண்ட பந்தலில் 60 ஆயிரம் பேர் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

மேலும் 1 லட்சம் பேர் நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி, விழாவில் கலந்து கொள்வோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. விழாவில் கலைஞரின் கடிதத்தொகுப்பு 54 புத்தகங்களாக வெளியிடப்படுகிறது.

மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ந்தேதி மாலை 4 மணி அளவில் வர உள்ளார். கொரோனா தொற்று குறைந்த பிறகு வெளி மாவட்டத்தில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக இந்த முப்பெரும் விழா நடைபெற உள்ள நிலையில் இதை நடத்துவதற்கான வாய்ப்பை முதல்-அமைச்சர் இம்மாவட்ட கழகத்திற்கு தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட தி.மு.க. செய்து வருகிறது. பிரமாண்ட அளவில் நடைபெறும் இந்த விழா பந்தல் மற்றும் முகப்புகளை காண்பதற்கு சுற்றி உள்ள கிராம மக்கள் வந்து செல்கின்றனர். முப்பெரும் விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து திரளாக மக்கள் கலந்துகொண்டு முதல்-அமைச்சரின் சிறப்புரையை கேட்க அழைக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.