திமுக முப்பெரும் விழாவில் 40 எம்.பிக்களும் பங்கேற்பார்கள் – அமைச்சர் முத்துசாமி தகவல்
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் முத்துசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர். இதையடுத்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல், வெற்றி வியூகம் வகுத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழாவை கோவையில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார்.
கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் புதுவையில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 40 பேரும் பங்கேற்க உள்ளனர்.
மேலும் அமைச்சர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.