தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
பின்னர் தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இளைஞரணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து நேற்று இரவு காரில் நெல்லை வழியாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார்.
முன்னதாக அவருக்கு தென்காசி மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், ஆலங்குளம் யூனியன் சேர்மனுமான திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலரும், தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளருமான சங்கீதா சுதாகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகே சிவந்திநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தென்காசி தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.
தொடர்ந்து மாலை 3 மணிக்கு தென்காசி இசக்கி மகாலில் ஒருங்கிணைந்த தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் சுமார் 1,500 முன்னோடிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் பொற்கிழி வழங்கி பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வருவாய்த்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
பின்னர் அதே மகாலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி பேசுகிறார். அதனை தொடர்ந்து இரவில் தென்காசியில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம் வழியாக விருதுநகருக்கு அவர் செல்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்க தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக ஆலங்குளத்தில் தொடங்கி தென்காசி வரையிலும் ஏராளமான வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் மகால் அருகிலும் ஏராளமான வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு, தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன.
விழா நடைபெறும் பகுதிகளில் அலங்கார வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல் முதலாக தென்காசி மாவட்டத்துக்கு அவர் வருகை தந்துள்ளதால் தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.