X

திமுக மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் – அதிமுக மூத்த தலைவர்கள் கருத்து

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தை தொடங்க அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தேர்தல் வியூகம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கூறியதாவது:-

அ.தி.மு.க. அடுத்தடுத்து 2 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை அதிக இடங்களில் வெற்றி பெற செய்ய புதிய வியூகம் வகுத்துள்ளோம்.

தமிழக அரசியலில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக மக்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது நிச்சயமாக அ.தி.மு.க.வுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் இருக்கும்.

இந்த தடவை அ.தி.மு.க. அதிக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒருங்கிணைந்து அடிப்படை உள்கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் முடித்து விட்டனர்.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்பை விட வலுவாக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் நேர்காணல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. எனவே அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.

கடந்த சில மாதங்களாக தி.மு.க. மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்காதது, நீட் தேர்வு பிரச்சினை, பொங்கல் பரிசு தொகுப்பில் குளறுபடி ஆகியவை நிச்சயமாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும்.

அவை அனைத்தும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக மாறும் என்று நம்புகிறோம். மாவட்டங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இடையே தேவையற்ற போட்டி ஏற்படுவதை தவிர்க்க ஏற்பாடு செய்துள்ளோம்.

கொரோனா காரணமாக பெரிய அளவில் மக்களை சந்திக்க இயலாது என்றாலும் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.