திமுக மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் மூலம் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சுமார் 70 தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெரும்பாலும் அரசியல் கட்சிகளை சார்ந்தே இயங்குகின்றன.
தமிழக பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுக்கு 15-வது ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவது, வாரிசுகளுக்கு வேலை, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைதொகை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை கடந்த பல மாதங்களாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளில் 70 தொழிற்சங்கத்துக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 9-ந்தேதி (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்ற அறிவிப்பில் பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. வேலைநிறுத்த அறிவிப்பில் அரசியல் வரக்கூடாது என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.
ஆனால் பிரதான தொழிற்சங்கங்களில் ஒன்றான கம்யூனிஸ்டு ஆதரவு பெற்ற சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அதை ஏற்கவில்லை. அ.தி.மு.க. தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பேரவையுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்க பேரவை, கம்யூனிஸ்டின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் மேலும் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாட்டாளி தொழிற்சங்கம் (பா.ம.க.), தே.மு.தி.க. தொழிற்சங்கம், தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை, பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.), புதிய தமிழகம் தொழிற்சங்கம், நாம் தமிழர் தொழிற்சங்கம், மனித உரிமை கழகம், திரு.வி.க. தொழிற்சங்கம் ஆகியவை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக உள்ளன.
மேலும் அகில இந்திய தொழிற்சங்க பேரமைப்பு (ஏ.ஐ.டி.யு.சி.), இந்து மஸ்தூர் சபா (எச்.எம்.எஸ்.), மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (எம்.எல்.எஸ்.) ஆகிய முக்கிய சங்கங்களும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு செல்லவில்லை. முக்கிய தொழிற்சங்கங்கள் அ.தி.மு.க. தொழிற்சங்கத்துடன் கைகோர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரதான தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என்று நேற்று அறிவித்தது. அ.தி.மு.க. தொழிற்சங்கம் இந்த போராட்டத்தை அரசியல் ஆக்குவதால் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு செல்வதாக அறிவித்தது.
இதன் காரணமாக இன்று காலை தி.மு.க.வின் தொ.மு.ச., காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்பட்டன. சில மாவட்டங்களில் அந்தந்த பகுதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருந்தன. மாவட்ட தொழிற்சங்கங்களால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.