திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார்

தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது.

அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி கூடுகிறது.

இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார்.

இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரிலும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு பெயரிலும் விண்ணப்பங்கள் வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.

அப்போது டி.ஆர்.பாலுவுடன் மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.

இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் இன்று பிற்பகல் 3 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். 5-ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மனுதாக்கல் செய்துள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை வருகிற 9-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools