Tamilசெய்திகள்

திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு வரும் புகார்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டு ரொக்கம் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு அவருடைய கணவர் சபரீசன் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதுபோல அண்ணா நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகனின் வீடு, அவருடைய மகனும், சபரீசன் நண்பருமான கார்த்தி மோகனின் அண்ணாநகரில் உள்ள அலுவலகம் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா என்பவரின் வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதேபோல் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள, கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியின் வீட்டில் காலை 11 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராயனூரில் உள்ள தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் வீட்டிலும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கொங்கு மெஸ் சுப்ரமணி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட கே.வி.கோட்டை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.