திமுக பலவீனமாகிவிட்டது – பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அல்லது தேர்தல் வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக தேர்தல் ஜுரம் வரும். ஆனால் தி.மு.க.வுக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஜுரம் வந்துவிட்டது. தி.மு.க.வுக்கு ஜுரம் வந்துவிட்டது என்று சொன்னால், அந்த அளவுக்கு தி.மு.க. பலவீனமாகி உள்ளது. ஜுரம் வரும்போது ஏதாவது பேசுவார்கள், அதுபோல தான் தற்போது தி.மு.க. பா.ஜனதாவை விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறது.
ஜெயலலிதா இருந்தபோதே தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக தெரிவித்தார். மின் உற்பத்திக்கு மத்திய அரசு எல்லா வகையிலும் உதவிகரமாக இருக்கிறது. மின் உற்பத்தியில் தற்போது என்ன பிரச்சினை என்பதை பார்த்து தமிழக அரசு சரிசெய்ய வேண்டும்.
கடந்த 2, 3 தினங்களாக சிறையில் மிகப்பெரிய குற்றம்செய்த பயங்கரவாதிகள் வாழும் வாழ்க்கை முறையை படம்பிடித்து வெளியே காட்டியபின்னர் தமிழக மக்களுக்கு ஒரு எண்ணம் தோன்றி உள்ளது. வெளியே இருப்பதைவிட சிறையில் இருந்தால் நன்றாக இருக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்துள்ளது.
அரசாங்கத்தின் விருந்தினராக மாமனார் வீட்டிற்கு போகிறாயா? என்று கேட்பதுபோல், சிறையை மாமனார் வீடாக மாற்றிய பெருமை தமிழக அரசுக்கு சேர்ந்துள்ளது. தயவுசெய்து தமிழக அரசு இதில் கவனம் செலுத்தவேண்டும்.
பயங்கரவாதிகள் சிறையில் உல்லாசமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், அவர்கள் சிறைக்கு வெளியே தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகத்தில் உள்ள பல இடங்களில் அவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு அந்த வாய்ப்புகளை யார் ஏற்படுத்தினார்கள்? துணையாக எந்த அதிகாரிகள் இருந்தனர் என்பதை கண்டுபிடித்து அவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.