Tamilசெய்திகள்

திமுக நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்கள்! – நிர்வாகிகளுக்கு கழகம் அறிவுரை

திமுக நடத்தி வரும் ஊராட்சி சபை கூட்டங்களில், மக்களிடம் நிர்வாகிகள் எப்படி நடந்துக் கொள்வது, என்பது குறித்து திமுக கழகம் அறிவுரை வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற மகத்தான மக்கள் பயணம் கடந்த 9-ந்தேதி அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினால் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்று வருகிறது.

இக்கூட்டங்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை மட்டுமல்ல, கழகத்தின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துகிறது. இது ஒரு பக்கம் பெருமையையும், இன்னொரு பக்கம் கழகத் தோழர்களாகிய நமக்கு பொறுப்பு கூடி வருகிறது என்பதையும் உணர வேண்டும்.

இந்த நல்வாய்ப்பை கழக நிர்வாகிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே தலைமைக் கழகத்தின் வேண்டுகோள்.

கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் ஊராட்சிகளுக்கு செல்லும் போது முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது:-

* ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு மக்களை இல்லந்தோறும் சென்று அழைத்திட வேண்டும்.

அச்சமயம், தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டறிக்கையை ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும். கூட்டத்தில் பங்கெடுக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கூட இந்த துண்டறிக்கை போய் சேர வேண்டும்.

* கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அனைவரும் ஊராட்சி சபைக் கூட்டத்திற்கு செல்லும்போது, அனைத்து ஊராட்சிகளிலும் நிச்சயமாக இருவண்ணக் கொடியை புது கம்பத்தில் பட்டொளி வீசி பறக்க வைத்திட, மாவட்ட செயலாளர்களிடம் கலந்து பேசி ஏற்பாடு செய்திட வேண்டும். 12,617 ஊராட்சிகளிலும், இந்த கூட்டங்களை முடிக்கும் போது ஊராட்சி சபை கல்வெட்டுடன் அந்த கொடி கம்பங்கள் தமிழகம் முழுவதும் இருந்திட வேண்டும்.

* கழகத் தோழர்கள், நிர்வாகிகள் தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அனைவரும் ஊராட்சி சபைக் கூட்டங்களுக்கு செல்லும் முன்பு ஊராட்சி செயலாளரின் இல்லம் சென்று, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

அச்சந்திப்பின் போது, அந்த ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பூத் கமிட்டிகளும் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அந்த பூத் படிவங்களை கையில் வைத்து கொண்டு சரிபார்க்க வேண்டும்.

ஊராட்சி சபைக் கூட்டம் மூலம் மக்களைச் சந்திப்பது எவ்வாறு முக்கியமோ, அந்தளவுக்கு, பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன், அந்த ஊராட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்திப்பது இன்னும் கூடுதல் பலன் தரும்.

* இவ்வாறு நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தின் விவரங்களையும், புகைப்படங்களையும் வாரத்திற்கு ஒருமுறை, முறைப்படுத்தி தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *