Tamilசெய்திகள்

திமுக தொடர்ந்த வழக்கு – தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. முதன்மை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேரு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

சாமானிய விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு அண்மையில் வேளாண் சட்டம் கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் இந்த சட்டத்தை தமிழக அரசும் ஏற்று அமல்படுத்த போகிறது. இதனால், இந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு திடீரென அக்டோபர் 1-ந்தேதி ரத்து செய்தது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 கிராமசபைகள் உள்ளன.

தமிழக கிராமங்களில் ஏறக்குறைய 4 கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆகவே பெரும்பான்மையான கிராம மக்களின் வாழ்வாதாரம் கிராம சபையுடன் இணைந்து இருப்பதால், அதை ரத்து செய்த அரசின் நடவடிக்கை கிராம ஊராட்சி சட்டப்படி தவறாகும். ஜனநாயக தவறு ஆகும். அரசியலமைப்பு சட்டமீறலாகும்.

இந்த அரசியலமைப்பு வழங்கியுள்ள மக்களின் உரிமையை பறிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, கிராம சபை கூட்டத்தை உடனே கூட்டுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில், “கிராமசபை என்பது அரசியலமைப்பு சட்டத்தில் 3-வது படியாகும். இந்த கூட்டத்தில் எது சம்பந்தமாக விவாதம் செய்யப்பட வேண்டும்? என்று அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட முடியாது. திருச்சி உள்ளிட்ட சில மாவட்ட கலெக்டர்கள், கிராமசபை கூட்டத்தில் அரசுக்கு எதிராக தீர்மானம் இயற்றக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவிட கலெக்டர்களுக்கு அதிகாரமே கிடையாது.

எதுகுறித்து விவாதம் செய்து தீர்மானம் இயற்றுவது என்பது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் தான் முடிவு செய்ய முடியும். எனவே கிராம சபை விதிகளில் அரசு தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். கிராமசபை கூட்டத்தை நடத்த உத்தரவிடவேண்டும்” என்று கூறினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், “கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலம் என்பதால், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக கிராம சபை கூட்டத்தை அரசு ரத்து செய்தது” என்று கூறினார். அதற்கு நீதிபதிகள், “டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.