தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க இருக்கிறது. மறைந்த ஆளுமைமிக்க தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கும் முதல் பொதுதேர்தல். தமிழக அரசியலின் அடுத்த கட்ட நகர்வை, சட்டசபை பொது தேர்தல் தொடங்கி வைக்க இருக்கிறது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களை தயார்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக களம் காண இருக்கிறார். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் வேட்பாளராக கொண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளது. எனவே இந்த தேர்தல் களம் முற்றிலும் மாறுபட்டதாக மாறியிருக்கிறது. முதல் கட்டமாக இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. நிர்வாகிகளுடன் அவ்வப்போது காணொலி காட்சி மூலம் உரையாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மாவட்ட அளவில் கட்சியில் புதிய நிர்வாகிகளையும் அறிவித்தார். தற்போது சட்டசபை தேர்தலின் கதாநாயகனாக கருதப்படும் தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு தி.மு.க. சார்பில் குழு அமைப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கியுள்ளார்.
இதற்காக 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த குழுவில், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.
இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார்.
இக்குழுவில் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.