திமுக சார்பில் நாளை சென்னையின் 4 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட தி.மு.க.விலும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த இப்போதே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டு உள்ளன.
இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டக் கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதாப்பேட்டை சின்னமலை, தாம்பரம், ஆவடி ஆகிய 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், சென்னை வடக்கு மாவட்டம், சென்னை வடகிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி முன்னிலையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னைக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், வடகிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் இணைந்து பங்கேற்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, வெற்றியழகன், பரந்தாமன், எபினேசர், ஐட்ரீமூஸ் மூர்த்தி, கே.பி.சங்கர் மற்றும் மாநில நிர்வாகிகள், கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.
இதே போல் காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம்பரம் சண்முகம் சாலையில் கழக பொருளாளர் கழக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக கூறி உள்ளார்.
இதில் தாம்பரம் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., மாவட்ட கழக துணை செயலாளர்கள் பல்லாவரம், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் மாநில நிர்வாகிகள், திரளாக பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.
சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் சென்னை தெற்கு மாவட்டம், சென்னை மேற்கு மாவட்டம், சென்னை தென் மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். மாவட்டக் கழக செயலாளர்கள் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், தி.நகர் ஜெ.கருணாநிதி, கணபதி, எழிலன், பிரபாகரராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகராட்சி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல் திருவள்ளூரில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று முழக்கமிட உள்ளனர்.