திமுக கூட்டணி கட்சிகள் நடத்த இருந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை!
கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் விநியோக உரிமையை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் (27-ந் தேதி ) முழு கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு கட்சியினர், தொழில் அதிபர்கள், தொழில் சங்கத்தினர், வியாபாரிகளை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வந்தனர்.
இந்தநிலையில் கோவையை சேர்ந்த வக்கீல் தினேஷ்குமார் என்பவர் தி.மு.க. உள்பட கூட்டணி கட்சியினர் சார்பில் நடத்தப்பட உள்ள முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை ஐகோர்ட் 5 -ல் நீதிபதிகள் சத்திய நாராயணா, சேஷாயி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வருகிற 27-ந் தேதி கோவையில் நடத்தப்பட இருந்த முழுகடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.