Tamilசெய்திகள்

திமுக கூட்டணியில் யார் சேர வேண்டும் என்பது தலைவரின் முடிவு! – டி.ஆர்.பாலு

தி.மு.க. பொருளாளராக டி.ஆர்.பாலு பதவி ஏற்ற பின்னர் தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று வருகை தந்தார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

பின்னர் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைவர் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்வது உறுதியாகி விட்டது. இதில் எந்த சந்தேகமும், இரண்டாவது கருத்தும் கிடையாது. 2 ஜி வழக்கில் ராஜா, கனிமொழி உள்பட அனைவரும் விசாரணை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அரசியல் நிமித்தமாக மேல்முறையீடு வழக்குகள் போடப்படுகிறது. வழக்குகள் போடட்டும். அதை சந்திக்க நாங்கள் தயார்.

அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. நான் தி.மு.க.வின் பொருளாளர். அ.தி.மு.க. என்கிற ஒரு கட்சி தற்போது உள்ளதா?. எம்.ஜி.ஆர். இருந்தபோது அ.தி.மு.க. இருந்தது. அதற்குப்பின் தேய்ந்து, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது.

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது. தி.மு.க. கூட்டணியில் யார் சேர வேண்டும் என்பது தி.மு.க. தலைவரின் முடிவு.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கு வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது ஒன்றே போதும். உதயநிதி ஸ்டாலின் தி.மு.க.வில் மிக முக்கிய பணியில் இருக்கிறார். அவர், சேப்பாக்கம் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் அவர் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த வீட்டிற்கு வந்த டி.ஆர்.பாலு அங்குள்ள கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகம், கருணாநிதி, முரசொலிமாறன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.