பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 தொகுதி என ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், ம.தி.மு.க.- தி.மு.க. இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. ம.தி.மு.க.வுக்கு ஒரு மக்களவை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் வைத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தி.மு.க., ம.தி.மு.க. இடையே மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, விருதுநகர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 6 இடங்களை விருப்ப தொகுதியாக ம.தி.மு.க. கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, நிரந்தரமாக தி.மு.க.வுக்கு பக்க பலமாக இருப்போம். ஒதுக்கப்படும் தொகுதி குறித்து கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சொல்வதாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது மனநிறைவு தான். தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் முதல்வரும், நானும் கையெழுத்து இட்டுள்ளோம். மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து தற்போது எதுவும் பேசவில்லை. மாநிலங்களவை சீட் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என்றார்.