திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் – இன்று முக்கிய அறிவிப்பு வெளியாவதாக தகவல்
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் தி.மு.க. கூட்டணியில் எந்த தொகுதியை கமல்ஹாசனுக்கு ஒதுக்குவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 21) சென்னையில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்க விழாவில் கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடக்க விழாவை ஒட்டி இன்று கட்சி அலுவலகத்துக்கு செல்லும் கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடலாம் என்று தெரிகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கும் போது, இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்து இருந்தார்.