Tamilசெய்திகள்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 5 தொகுதிகள்? – அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் டெல்லி பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்கள்.

டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜய் குமார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வ பெருந்தகை ஆகியோர் கடந்த வாரம் தி.மு.க. குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, கூட்டணியில் இடம் பெற்றுள்ள எல்லா கட்சியினருக்கும் தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறையும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 15 தொகுதிகள் பட்டியலை கொடுத்து 12 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பாராளுமன்ற தேர்தலுக்கு கூடுதல் சீட் தருவதாக ஒப்புக்கொண்டதையும் சல்மான் குர்ஷித் தி.மு.க. குழுவிடம் நினைவுபடுத்தி அதை மறந்துவிடாதீர்கள் என்று கூறி உள்ளார். அதை கேட்டதும் “12 போதுமா…?” என்று நையாண்டியாக கேட்டுள்ளார்கள். கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதைவிட குறைக்கிறீர்களே என்று பரிதாபமாக கேட்டுள்ளார்கள்.

எல்லா கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். எங்களால் 5-க்கு மேல் தர இயலாது. வேண்டுமானால் முதலமைச்சரிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதனால்தான் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் எண்ணிக்கையை கூட உறுதிப்படுத்த முடியாமல் போனது.

அடுத்த வாரம் வரவிருக்கும் டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார்கள். அப்போது கடந்த தேர்தலைவிட தொகுதிகள் எண்ணிக்கை குறைய கூடாது என்று வற்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் 5 புதுவையில் ஒன்று என 6 தொகுதிகளுக்கு மேல் வழங்க இயலாது என்று தி.மு.க. தரப்பில் கூறுகிறார்கள்.