X

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுகிறதா? – இன்று ராகுல் காந்தியுடன் ஆலோசனை

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கடந்த தேர்தலில் 41 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் இந்த தேர்தலிலும் அந்த எண்ணிக்கை குறையக்கூடாது என்ற எண்ணத்திலேயே பேச்சுவார்த்தையை தொடங்கியது.

ஆனால் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை கொடுத்ததால் ஏற்பட்ட அனுபவத்தை மனதில் கொண்டு 18 தொகுதிகள்தான் தர இயலும் என்று தி.மு.க. கூறியது.

ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும் போக போக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். எல்லாம் சரியாகி விடும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது.

ஆனால் அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் இத்தனை தொகுதிகளுக்கு மேல் கொடுப்பது வீண் என்று ஐ-பேக் நிறுவனம் ஒரு கணக்கை போட்டு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தி.மு.க. தரப்பில் 18-க்கு மேல் நகரவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை விழுந்தது.

இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை பெறுவது கட்சி நலனை பாதிக்கும் என்று கருதியதால் அனைத்து நிர்வாகிகளின் கருத்துக்களையும் கேட்க முடிவு செய்தனர்.

இதையடுத்து செயற்குழு கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கப்பட்டது.  கருத்து கேட்பதற்காக வீரப்ப மொய்லி, தினேஷ் குண்டு ராவ், சஞ்சய்தத், ஸ்ரீவல்ல பிரசாத், பல்லம் ராஜூ ஆகியோரும் வந்திருந்தனர்.

அப்போது தி.மு.க. குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றபோது மிகப்பெரிய தேசிய கட்சி என்ற மரியாதை கூட  தராததை சுட்டிக்காட்டிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை எண்ணி கண்கலங்கினார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? தனித்து போட்டியிடலாமா? என்று கருத்துக்கள் கேட்டனர். அப்போது 30 தொகுதிகள் வரை தந்தால் கூட்டணியை தொடரலாம் என்றும், தனித்து போட்டியிடலாம் என்றும் கமல் கட்சியுடன்  கூட்டணி அமைக்கலாம் என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

கலைஞர் காலத்தில் இருந்தே பல தேர்தல்களில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் இந்த தேர்தலில் தான் இவ்வாறு கதற விட்டு விட்டனர் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர்.

இதுவரை தி.மு.க. தலைமையில் இருந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான அழைப்பு எதுவும் வரவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகளின் கருத்து, தி.மு.க.வின் முடிவு ஆகிய விபரங்களுடன் வீரப்பமொய்லி டெல்லி விரைந்துள்ளார்.

இன்று டெல்லியில் ராகுல்காந்தியை சந்திக்கிறார். அப்போது தமிழக நிலவரம் பற்றி எடுத்து சொல்வார். ராகுலின் ஆலோசனைப்படி அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் தி.முக. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பதால் காங்கிரசுக்கு 24 தொகுதிகள் வரை வழங்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளுமா? என்பது அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தான் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.