Tamilசெய்திகள்

திமுக, காங்கிரஸ் கூட்டணி பயனற்ற கூட்டணி! – தம்பிதுரை பேட்டி

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள மெய்யனம் பட்டி, தளிஞ்சி, கதவம் பட்டி, கிளிக்குடி, பரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து அவரது குறைகள் அடங்கிய மனுக்களை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

18 ஆண்டுகால தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அப்போது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்தால் மக்களுக்கு நல்லது செய்யமாட்டார்கள்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பயனற்ற கூட்டணி. அந்த கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் எங்களது குறிக்கோள். அதற்காகத்தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க. பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளது.

தே.மு.தி.க. வந்தால் தான் அ.தி.மு.க. வெற்றி பெரும் என்ற நிலையில்லை. இருப்பினும் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரவேண்டும் என்பதே எங்களது ஆவல். ஒரு கட்சி என்றால் தேர்தல் நேரத்தில் பல கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்ததை நடத்துவது என்பது வழக்கம்.

ஆனால் தே.மு.தி.க. தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது குறித்து துரைமுருகன் விமர்சித்திருப்பது அநாகரிகமான செயல். இதை வைத்தே தி.மு.க. எப்படிப்பட்ட கட்சி என்று தெரிய வருகிறது. இவர்கள் வந்தால் மொழியையோ இனத்தையோ காப்பாற்ற முடியாது. ஸ்டாலின் கற்பனையில் பேசி வருகிறார். ஸ்டாலினால் அவர் வீட்டில் உள்ள பிரச்சனைகளையே தீர்க்க முடியவில்லை, நாட்டில் உள்ள பிரச்சனைகளையா தீர்க்க போகிறார்கள்.

ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பா.ஜ.க. அ.தி.மு.க. நட்புடன் தான் இருந்து வருகிறது. இருந்தாலும் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால்தான் நானும் அவர்களை விமர்சனம் செய்தேன். ஆனால் மத்திய பா.ஜ.க. தலைவர்கள் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை. அ.தி.மு.க.வோடு விருப்பப்பட்டே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. விருப்பம் இல்லாமலா குமரிக்கு வந்த பிரதமர் மோடி எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *