நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. போட்டியிட்ட 19 தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வெற்றியை கருணாநிதிக்கு சமர்ப்பிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று காலை சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.
கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் உள்பட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் நினைவிடத்தை சுற்றி வலம்வந்தனர். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.
அங்கிருந்து வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வணங்கினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்றனர். பாராளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்ததற்காக மு.க. ஸ்டாலினுக்கும், வெற்றிபெற்ற அனைவருக்கும் க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.