வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காத்தவராயன்.
தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 18 தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர்.
இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. பேரணாம்பட்டு சின்ன பஜார் வீதியில் சகோதரர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு இருதயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். அது குணமாகாததால் கடந்த மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை சீரடையவில்லை. அவரது உடல் மிகமோசமான கட்டத்தில் இருப்பதாக மருத்துவ குழுவினர் நேற்று எம்.எல்.ஏ.வின் உறவினர்களை அழைத்து தகவல் கூறினார்கள். இதனை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை காத்தவராயன் எம்.எல்.ஏ.வின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
காலை 9.30 மணிக்கு காத்தவராயன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. அவரது மரணச் செய்தி கேட்டதும் தி.மு.க. மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தி.மு.க. நிர்வாகிகள் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடல் சொந்த ஊரான போரணம்பட்டுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அங்கு நாளை (சனிக் கிழமை) இறுதி சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காத்தவராயன் 9 மாதங்களே எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். திடீரென ஏற்பட்ட இருதய நோய் அவரது மரணத்துக்கு காரணமாகி விட்டது.
இதன் காரணமாக குடியாத்தம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 2 எம்.எல்.ஏ.க்களை அந்த தொகுதி பறிகொடுத்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ. இன்று மரணம் அடைந்து இருப்பது தி.மு.க.வினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
சட்டசபையில் தி.மு.க. வுக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். கே.பி.பி.சாமி மரணம் காரணமாக அது 99 ஆக குறைந்து இருந்தது. தற்போது குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ. காத்தவராயன் மரணம் அடைந்ததால் சட்டசபையில் தி.மு.க.வின் பலம் 98 ஆக குறைந்து விட்டது.
காத்தவராயன் 1961-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந்தேதி பிறந்தார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு பெரிய தம்பி, சின்ன தம்பி, ஜெய்சங்கர் என்ற சகோதரர்கள், செல்வி என்ற சகோதரி உள்ளனர்.
1980-ம் ஆண்டு தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1984-ம் ஆண்டு பேரணாம்பட்டு நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1986-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர்.
பின்னர் 1987-ல் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார்.
1990-ல் மாவட்ட பிரதிநிதி. 2013-ம் ஆண்டில் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2011- ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பேரணாம்பட்டு நகராட்சி தலைவராக இருந்தார்.
வேலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுடன் இணைந்து பல்வேறு கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
பேராணாம்பட்டு தனி தொகுதியாக இருந்த போதும் மற்றும் தொகுதி சீரமைப்புக்கு பின்னர் குடியாத்தம் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து 8 முறை தி.மு.க.வில் போட்டியிட சீட் கேட்டார்.
9-வது தடவையாக அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அந்த பதவியில் முழுமையாக இருக்க இயலாமல் மரணம் அவரை வீழ்த்தி விட்டது.
மே மாதம் நடந்த குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் கிடைத்த ஓட்டு விவரம்:-
(தி.மு.க.)- 1,06,137
(அ.தி.மு.க.)- 78,296
(அ.ம.மு.க.)- 8,186
(நாம்தமிழர்)- 4,670
(மக்கள் நீதிமய்யம்)-3,287.