X

திமுக உண்மையை பேசுகிறது – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 292-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி சிவகங்கையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதன் பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

ராஜேந்திர பாலாஜி எங்களின் தோழமை கட்சியில் உள்ள முக்கியமான தலைவர். அவரை பா.ஜ.க. கொண்டு போய் ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் குற்றமற்றவர் என நிரூபித்து அவர் வருவார். அதுவரை காத்திருக்க வேண்டும்.

பாரத பிரதமருக்கு தமிழக மக்கள் மீது அன்பு, பாசம் குறையாமல் இருந்து வருகிறது. தமிழக மாணவர்களுக்கு 1,652 மருத்துவ சீட் கூடுதலாக பிரதமர் கொடுத்துள்ளார். தமிழகத்தில் மருத்துவ இடங்கள் தற்போது 2 மடங்காக அதிகரித்துள்ளது.

இப்போது தி.மு.க. புரிந்து கொண்டு விட்டது. இப்போது உண்மையை பேசுகிறார்கள். அதை பா.ஜ.க. வரவேற்கிறது. வேலு நாச்சியார் சிலையை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும், பாடப்புத்தகத்தில் அவரை பற்றிய பாடம் இடம் பெற வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் சட்டபூர்வமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டு தொகை அவரவர் வங்கி கணக்குகளுக்கு வரத்தொடங்கியுள்ளது. தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.