திமுக இளைஞரணி தலைவராகும் உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க.வில் இளைஞர் அணி மிக வலுவான அமைப்பாக விளங்கி வருகிறது. இந்த அணி தொடங்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தார்.

அவர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டதால் இளைஞர் அணி செயலாளராக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை நியமித்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி பொறுப்புக்கு விரைவில் வந்து விடுவார் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

அதற்கேற்ப உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தீவிரமாக இறங்கி பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி பதவி கொடுக்க வேண்டும் என்று பல மாவட்டச்செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பினார்கள்.

இந்த நிலையில் இளைஞர் அணி செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜினாமா செய்துள்ளார்.

இதனால் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உதயநிதி இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆசி பெறுகிறார். அதன் பிறகு அண்ணா, கருணாநிதி, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

அதன் பிறகு இளைஞர் அணிக்காக தேனாம்பேட்டையில் கட்டப்பட்டுள்ள அன்பகத்துக்கு சென்று பணியை தொடங்குகிறார். கட்சி மூத்த நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெறுகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் அன்பகத்தில் செய்யப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news