சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால தி.மு.க.வின் விடியா ஆட்சியில், சட்டம்- ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, தமிழகத்தில் வடமாநில கொள்ளையர்கள் மற்றும் தமிழ்நாட்டு கிரிமினல்களின் அட்டகாசம் அதிக அளவில் இருந்தது.
காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஜெயலலிதா உத்தரவிட்டதன் காரணமாக குற்றவாளிகள் அடக்கி ஒடுக்கப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பேணி காக்கப்பட்டு, தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்தது. ஜெயலலிதாவை தொடர்ந்து, அ.தி.மு.க. அரசும் இரும்புக்கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக குற்றங்கள் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் சர்வ சாதாரணமாக கொலை, கொள்ளை, திருட்டு, செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
இந்த அரசின் இயலாமையை உணர்ந்த கவர்னர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யை அழைத்து வழங்கிய அறிவுரைக்குப்பின் சுமார் 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதில் 2 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் மேலும் சுமார் 1,750 பேர் வரை நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 8 ஆயிரம் நபர்கள் யார்? அவர்களது நிலை என்ன? அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள்? என்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என்று தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன தகாத சம்பவங்கள் தங்களை சுற்றி நடக்குமோ என்ற பாதுகாப்பற்ற நிலையில், பீதியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மேலும் சீரழியாமல், மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், கிரிமினல்களை அடக்குவதும், மக்களை சுதந்திரமாக பயமின்றி இயங்க வைப்பதும், காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சரின் தலையாய கடமையாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.