திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சட்டசபை எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் கொலை, கொள்ளை, மாணவிகள் உள்ளிட்டோர் மீதான பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது. சமூக விரோத சக்திகளும், கொடுஞ்செயல் புரிவோரும் இந்த ஆட்சி தங்களுக்கு லைசென்ஸ் வழங்கியது போல் பல்வேறு குற்றங்களைப் புரிந்து, மக்களை மிரட்டி வருகிறார்கள்.

சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். அந்த இடத்தில், தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன்கள், பேட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெரியவில்லை. சென்னை, எண்ணூரைச் சேர்ந்த ரவுடி, வழக்கு ஒன்றில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறையின் உதவி ஜெயிலர், ஜெயிலில் திடீர் சோதனை நடத்தும்போது, மேலே குறிப்பிடப்பட்ட கைதியிடமிருந்து செல்போன்கள் மற்றும் பேட்டரிகளை பறிமுதல் செய்திருக்கிறார் என்றும், இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கைதி, உதவி ஜெயிலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 27.8.2022 அன்று கடலூர் சிறை வளாகத்திற்கு அருகில், காவலர் பாதுகாப்புடன் கூடிய காவலர் குடியிருப்பில் அமைந்துள்ள உதவி ஜெயிலர் வீட்டிற்குள் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுவீசி எரித்திருக்கிறார்கள். உதவி ஜெயிலர் வெளியூர் சென்றிருந்ததாலும், அவருடைய குடும்பத்தினர் வேறு ஒரு அறையில் இருந்ததாலும் உயிர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே போன்று, தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் தடை செய்யப்பட்ட பொருட்களான செல்போன், போதைப் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை தாராளமாகக் கிடைப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேர்மையான முறையில் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரியை அச்சமூட்டும் வகையில், அவரது வீடு தாக்கப்படும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

அதே நேரம், சமூக விரோதிகள் சகல வசதிகளுடன் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் ராஜநடை போடுகிறார்கள். கடந்த 10 ஆண்டு கால அம்மாவின் ஆட்சியில், பொதுமக்களும், குறிப்பாக பெண்களும் பாதுகாப்போடு இருந்ததை இப்போது உணர்கிறார்கள்.

தற்போது, பட்டப்பகலில் கூட வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் அச்சப்படுகிறார்கள். அம்மா ஆட்சியில் அமைதிப் பூங்காவாய்த் திகழ்ந்த தமிழகம், இன்றைய விடியா தி.மு.க. ஆட்சியில் அழிவுப்பாதைக்கே சென்று விட்டது. முதல்-அமைச்சரின் காதுகளில், அவரை பாராட்டுபவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிப்பதால், மக்களின் ஓலங்கள் கேட்கவில்லையோ? மக்களைக் காக்க திறமையில்லாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும் காக்கத்தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்தெழ வேண்டும். இல்லையென்றால், விடியா தி.மு.க. அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அ.தி.மு.க. ஈடுபடும் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools