Tamilசெய்திகள்

திமுக ஆட்சியமைத்து 100 நாட்கள் நிறைவு – 120 திட்டங்களை அறிவித்த முதலமைச்சர்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 16-வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடந்து செல்ல வேண்டிய அரசியல் பாதை சுமுகமாகவே அமைந்திருக்கிறது.

ஆனால், இப்போது முதன் முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா என்னும் பேரிடர், அவரது பாதையில் தொடக்கத்திலேயே தடையாக இருக்கிறது. மாநிலத்தின் நிதி நிலைமையும் மோசமாக இருக்கும் நிலையில், அதையும் முறையாக கையாண்டு, கொரோனாவையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும், தேர்தலுக்கு முன்பு தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும் ஒரு கண்ணாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டிருந்தார். அதன்படி, கடந்த மே மாதம் 7-ந் தேதி பதவியேற்ற அன்றே 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அதாவது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதியுதவி, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிருக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம், மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண “உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்” என்ற புதிய துறை உருவாக்கம், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவை அரசே ஏற்பு ஆகிய கோப்புகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், அதிகாரிகளுடன் அவர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டார். துறை வாரியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

மே மாதம் 11-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதிற்கும் மேற்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி போட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மே 12-ந் தேதி முன்களப்பணியாளர்களான டாக்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாத காலத்திற்கான ஊக்கத்தொகை ரூ.30 ஆயிரமும், நர்சுகளுக்கு ரூ.20 ஆயிரமும், தூய்மைப் பணியாளர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள், சி.டி. ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரமும், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதே நாளில், அனைத்து மாவட்ட சுகாதார மையங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.

மே 21-ந் தேதி, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதே மாதம் (மே) 29-ந் தேதி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வெளியானது. மேலும், கொரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கும் அறிவிப்பும், அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இன்றி, உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.

ஜூன் மாதம் 3-ந் தேதி, தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 போலீசாருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜூன் 5-ந் தேதி, மாணவர்கள் நலன் கருதி நடப்பு ஆண்டிற்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே மாதம் 26-ந் தேதி, பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிக்கப்பட்டது.

ஜூலை மாதம் 20-ந் தேதி “முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு”, 49 திட்டங்களின் மூலம் ரூ.28,508 கோடி முதலீட்டில் 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜூலை 27-ந் தேதி, தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், “தகைசால் தமிழர்” விருது அறிவிக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று வரும் 14-ந் தேதியுடன் (நாளை மறுநாள்) 100 நாட்கள் ஆகிறது. இப்படி, பதவியேற்ற 100 நாட்களுக்குள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 120-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து வெளியாகிக்கொண்டும் வருகின்றன. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நாளை (வெள்ளிக்கிழமை) 2021-2022-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதேபோல், நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்தியாவிலேயே முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

எனவே, இந்த இரு பட்ஜெட்டுகளில் நாட்டு மக்களையும், விவசாயிகளையும் கவரும் வகையில் அடுக்கடுக்கான அறிவிப்புகள் இடம்பெறும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.