தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முதல்-அமைச்சர்களாக தமிழகத்தில் ஆட்சி செய்த போது மத்திய அரசால் நீட் தேர்வை 100 சதவிகிதம் கொண்டு வர முடியவில்லை. அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு மத்திய அரசு கொண்டு வந்தது.
இதை முதலில் அ.தி.மு.க.வினர் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்திற்கு எதிரான அத்தனை திட்டங்களையும் மத்திய அரசு திட்டமிட்டு திணித்து வருகிறது. இதனை எதிர் கொள்ளும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. எனவேதான் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்தான் தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியும்.
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தீரப் போவதில்லை. அவர்களால் சட்டமன்ற வேட்பாளர்களை கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள். அ.தி.மு.க.வில் ஒரே குடும்பத்தில் பலருக்கும் பதவி வழங்குவதால் அக்கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது.
எனவே திமுக ஆட்சி அமைப்பது முடிவாகி விட்டது. அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் ஏற்பட்டு இருக்கிறது. அமைச்சர் உதயகுமார் தனது வாயை அடக்கி பேச வேண்டும். ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்.சை ராமன், லட்சுமணன் என்று கூறும் உதயகுமார் ஒரு காலத்தில் ஒ.பி.எஸ்சை எவ்வளவு தூரம் திட்டி பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அதே ஓ.பி.எஸ்சை புகழ்வதும் மக்களுக்கு தெரியும்.
எனவே அவரது பேச்சை யாரும் நம்பப் போவதில்லை. அவருக்குத் தேவை பணம், பதவி. அவர் அடுத்து எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறப்போவதில்லை. தி.மு.க. தலைமை உத்தரவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் போட்டியிட தயாராக உள்ளேன். சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. முதலில் வெளியில் வரட்டும் அதற்குப்பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.